ஊர்காவல் படையினருக்கு மாதத்தில் 5 நாள் வேலை வருமானம் இன்றி புலம்பல்

கம்பம், ஜூலை 2

ஊர்காவல் படையினருக்கு மாதத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதால் மற்ற நாட்களில் வருமானம் இன்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர். இவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் திருவிழாக்கள், அரசியல் கட்சி ஊர்வலங்கள், மாநாடு, இயற்கை பேரிடர், தேர்தல் காலங்களில் போலீசார் தேவை அவசியமாகும். போலீசாருக்கு உதவ ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. இது தற்காலிக பணியாகும். இவர்கள் போலீசார் போன்று காக்கி சீருடை அணிந்து பணி புரிவார்கள். தேனி மாவட்டத்தில் 385 பேர் இப்பணியில் உள்ளனர்.

இவர்களின் பணி நேரம் என்பது போலீசார் அழைக்கும் போது மட்டும் வர வேண்டும் . ஒரு நாளைக்கு ரூ 568 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி ஒதுக்கீடு செய்கின்றனர். மீதமுள்ள 25 நாட்களும் வேலையில்லாமல் சிரமம் அடைகின்றனர்.

ஊர்க்காவல் படையினர் கூறுகையில், ‘மாதத்திற்கு 5 நாட்கள் பணி கிடைக்கிறது. இதனால் வேறு பணியில் ஈடுபட்டிருக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை உடனே டூட்டிக்கு வாருங்கள் என அழைக்கின்றனர். தனியாரிடம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதை விட்டு விட்டு எப்படி வர முடியும்.

ஒட்டலில் பணியாற்றும் தொழிலாளிக்கு தினமும் ரூ.ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. 30 நாளும் வேலை செய்யலாம். ஆனால் காக்கி சீருடை அணியும் நாங்கள் மாதம் 5 நாட்கள் வேலை என்பது இயற்கைக்கு பொருந்தாத ஒன்றாக உள்ளது. எங்களுக்கு மாதம் 30 நாளும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவும் சம்பளத்தையும் உயர்த்தி தர வேண்டும் என்கின்றனர்.

Advertisement