பிரபல ஹோட்டலில் ரூ.75,000 கையாடல் :ஊழியர்கள் 3 பேர் கைது
தி.நகர்: தி.நகரில் உள்ள பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர்களுக்கு 'பில்' வழங்காமல், 75,000 ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
தி.நகரில் உள்ள 'கீதம் வெஜ் ரெஸ்டாரண்டில்' டியூட்டி மேனேஜராக பணி புரிபவர் சுரேஷ், 38. இவர், உணவகத்தின் கணக்கை சரிபார்த்தபோது, பணம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு பணிபுரியும் காசாளர்கள் சுரேஷ், 24 ராகுல் டிராவிட், 23 மற்றும் ஸ்வீட் ஸ்டால் பொறுப்பாளர் மணிகண்டன், 26 ஆகியோர், கடந்த 5ம் தேதி முதல் 26ம் தேதி வரை, வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்காமல், 75,534 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.