போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது

செங்கல்பட்டு:செங்கை புறநகர் பகுதிகளில் போதை மாத்திரை விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, மர்ம நபர்கள் போதை மாத்திரைகள் விற்பதாக செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு டவுன் போலீஸ் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று சோதனையில், ஈடுபட்டடிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். துரத்தி பிடித்த போலீசார், அவர் கொண்டு வந்த பைகளை சோதனை செய்ததில், வலி நிவாரணி போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் சென்னை பெரம்பூர் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி வந்து கல்லுாரி மாணவர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து, மும்பை பகுதியை சேர்ந்த ஃபைஸ் முகமது யூசூப் கத்திரி, 37. யோகிதாவிபுல் ஜோகானி, 54, சென்னை செங்குன்றத்தை சேர்ந்த வைஷ்ணவி, 23, உள்ளிட்ட மூவரை நேற்று கைது செய்தனர்.

பின் விற்பனைக்கு வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27,000 போதை மாத்திரைகள் மறற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement