மேகதாது அணைக்கு எதிர்ப்பு; பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவங்கினார் அன்புமணி
தருமபுரி: மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி, பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவக்கினார்.
காவிரியின் குறுக்கே மேகதாது எனுமிடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகா, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக நிதியை ஒதுக்கிய அம்மாநில அரசு, மத்திய அரசின் அனுமதியை பெற முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வலியுறுத்தி பிலிகுண்டுலுவில் நடை பயணத்தை துவங்கப்போவதாக அவர் அறிவித்தார். இதில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, காவிரி நீர் தமிழகத்திற்குள் நுழையும் பகுதியான பிலிகுண்டுலுவில் அன்புமணி இன்று தனது நடைபயணத்தை துவக்கினார். இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவியும், எம்எல்ஏவுமான சவுமியா உள்பட பாமகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஒகேனக்கல்லில் துவங்கிய இந்த நடைபயணத்தை வரும் 4ம் தேதி பூம்புகாரில் நிறைவு செய்ய இருக்கிறார்.