ஐரோப்பாவில் கோர தாண்டவமாடும் வெப்பஅலை; ஸ்பெயின், பிரான்சில் 2000 பேர் பலி

மாட்ரிட்: ஐரோப்பாவில் நிலவி வரும் வெப்ப அலை காரணமாக ஸ்பெயின் மற்று்் பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஐரோப்பாவில் சீதோஷண நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. இரவிலும் கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மக்கள் நாடி வருகின்றனர்.

இந்த சுட்டெரிக்கும் வெயில் காரணமாகப் பல உயிரிழப்புகள், மின்சாரத் துண்டிப்பு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் சராசரியை விட, ஐரோப்பா 2 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். மேலும், கடந்த ஜூன் 21 முதல் ஐரோப்பா முழுவதும் 1,300க்கும் அதிகமான உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், ஸ்பெயின் மற்றும் பிரான்சில் நிலவும் வெப்ப அலைக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் ஸ்பெயினில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்காகும்.

Advertisement