தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

16


சென்னை: அனைத்து தவெக எம்எல்ஏக்களிடமும் கடந்த 40 நாட்களாக பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் நிர்மல்குமார் கூறியதாவது: அனைத்து தவெக எம்எல்ஏக்களிடமும் கடந்த 40 நாட்களாக ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். ஒரு சில எம்எல்ஏக்களை மிரட்டியுள்ளனர். தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி நடைபெற்றுள்ளது. ஸ்டாலின், உதயநிதி உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள் எங்களது பல எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேரம் பேசி இருக்கின்றனர்.

திமுக தரப்பில் இருந்து பேரம் பேசப்படாத தவெக எம்எல்ஏக்களே இல்லை.திமுகவுடன் இபிஎஸ்யும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றனர். ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒரு எம்.எல்.ஏ. புகாரளித்துள்ளார். தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் தொடர்ந்து பேசுவதன் பின்னணி பேரம் தான். ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் ரூ.40 கோடி, ரூ.50 கோடி கொடுத்து பர்சேஸ் செய்யும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறார்.

ரூ.50 கோடி கொடுத்து எம்எல்ஏக்களை வாங்க ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? மக்களுக்கு செய்த கெடுதல்களுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு, தயவு செய்து ஸ்டாலின் இதற்கு மேல் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள். தவெக எம்எல்ஏக்கள் வெறும் ரூ.2 லட்சம் செலவு செய்து வென்றவர்கள். ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்து தவெக எம்எல்ஏக்கள் வெல்லவில்லை. தவெக எம்எல்ஏக்கள் தொகுதிக்கு ரூ.70 கோடி செலவழித்து வெல்லவில்லை. தவெக எம்எல்ஏக்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் தவெக சந்திக்க தயாராக உள்ளது.

எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியவர்களிடம் கரூர் கம்பெனிக்கு நேரடி தொடர்பு உள்ளது. கீழ்த்தரமான கேவலமான வேலை செய்வோர் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவெக யாரிடமும் பேரம் பேசவில்லை. பேரம் பேசியவர்கள் கைது செய்யப்பட்டதை மறைப்பதற்கு திமுக கவர்னர் இடம் புகார் அளித்துள்ளது. பேரம் பேசியதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடலாமே. தவெகவில் சேருபவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் கிடையாது. இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement