வியாபாரியை கடத்தி நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது

சென்னை: மரக்கடை வியாபாரியை கடத்தி, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 63. இவர், அதே பகுதியில் மரக்கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பத்மா, 47, என்பவருடன் கோவிந்தசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பத்மாவுக்கு கோவிந்தசாமி பணம் கொடுத்து உதவி வந்துள்ளார்.

இந்நிலையில், கோவிந்தசாமியிடம் அதிக பணம் பறிக்க திட்டமிட்ட பத்மா, கொடுங்கையூரில் மரங்கள் விற்பனைக்கு உள்ளன; குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசைக்காட்டி அழைத்து சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து பூட்டி, பத்மா தன் கூட்டாளிகளான நான்சி, 30, அவரது கணவர் கருப்புசாமி, 30 ஆகியோர் கோவிந்தசாமியின் ஆடைகளை கழட்டி வீடியோ எடுத்து, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் தராவிட்டால், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக கூறியுள்ளனர்.

சுதாரித்த கோவிந்தசாமி 'நான் வெளியே சென்று பணத்தை ரெடி செய்து தருகிறேன்' எனக்கூறி, அங்கிருந்து தப்பித்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிந்து, குற்றச்செயலில் ஈடுபட்ட பத்மா, நான்சி மற்றும் கருப்புசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement