மின் கம்பத்தில் மோதிய லாரி சென்னிமலையில் பரபரப்பு

சென்னிமலை:சென்னிமலையில்,விறகு லோடு ஏற்றி வந்த லாரி மோதி, மின் கம்பம்
உடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து, விறகு லோடு ஏற்றிக்கொண்டு, லாரி சென்னிமலை வழியாக பெருந்துறையில் உள்ள கம்பெனிக்கு சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டம், பழம்பூண்டியை சேர்ந்த வெங்கடேசன், 42, என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று காலை சென்னிமலை டவுன், மஜீத் வீதி வழியே லாரி சென்றபோது, சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் கம்பம் உடைந்து லாரி மீது சாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள், உடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement