தாய் பத்திரம் கேட்டு இழுத்தடிப்பு சார் - பதிவாளர்கள் மீது புகார்

சென்னை: நீதிமன்றம் தடை விதித்தபோதும், பத்திரப்பதிவின் போது, அசல் தாய்ப்பத்திரம் கேட்டு, சார் - பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக புகார் கூறப்படுகிறது.

வீடு, மனை விற்பனை பத்திரம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் போது, விற்பவர் பெயரில் உள்ள அசல் பத்திரத்துடன், தாய்ப்பத்திரத்தின் அசல் பிரதியையும் தாக்கல் செய்ய வேண்டும்.

இதை கட்டாயமாக்கும் வகையில், பதிவு சட்டத்தில், '34சி' என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. சில சமயங்களில், அசல் தாய்ப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதை காரணமாக வைத்து, சார் - பதிவாளர்கள் பத்திரத்தை பதிவுக்கு ஏற்காமல் நிராகரிக்கின்றனர்.

இந்த பிரச்னை தொடர்பான வழக்கில், அசல் தாய்ப்பத்திரம் கொண்டு வர முடியவில்லை என்றால், 'பதிவுத்துறையில் உள்ள தரவுகள் வாயிலாக, உண்மை தன்மையை சரி பார்க்கலாம்' என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சமீபத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அசல் தாய்ப்பத்திரத்தை கேட்பதற்கான சட்டப் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், அதை அமல்படுத்த பதிவுத் துறை மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை கடைபிடிக்குமாறு, பதிவுத்துறை தலைவர் உத்தரவிடவில்லை என, சார் - பதிவாளர்கள் காரணம் கூறுகின்றனர். அதனால், அசல் தாய்ப்பத்திரம் கேட்டு, சார் - பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement