தேயிலை தோட்டத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் தொழிலாளர்களுக்கு தோல் வியாதிகள் அதிகரிக்கும் அபாயம்

பந்தலுார்: பந்தலுார் அருகே நெல்லியாளம், டான் டீ தேயிலை தோட்டங்களை ஆக்கிரமிக்கும், பார்த்தீனியம் செடிகளால் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட நிறுவனமான,'டான்டீ' நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தோட்டத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லியாளம் டான்டீ தேயிலை தோட்டங்களில், பார்த்தீனிய செடிகள் அதிக அளவில் வளர்ந்து தேயிலை செடிகளை விட கூடுதலாக காணப்படுகிறது. 'அஸ்ட்ரேசி' தாவர குடும்பத்தை சேர்ந்த இவை நச்சு செடியாக உள்ளது. ஒரு பார்த்தீயனம் செடி, 15 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதால், இவை வேகமாக பரவி வருகிறது.

இந்த செடிகள் உள்ள பகுதிகளில் தேயிலை பறிப்பதால், பெண் தொழிலாளர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. தோல் அரிப்பு, கொப்புளம், தோல் வியாதிகள் பரவ காரணமாகி உள்ளது. எனவே, அரசு தேயிலை தோட்டத்தில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த, டான் டீ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களை காக்க வேண்டும்.

Advertisement