தடுப்பு இல்லாத பரந்துார் சாலையில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம், ஜூலை 4–

காஞ்சிபுரம்–பரந்துார் சாலை வளைவுகளில், இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் இருந்து, பரந்துார் கிராமத்திற்கு செல்லும், 12 கி.மீ., துார பிரதான கிராமப்புற சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, காரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பரந்துார், ஏகனாபுரம், மதுரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில், ஆண்டி சிறுவள்ளூர், காட்டுப்பட்டூர், மேல்பொடாவூர் உள்ளிட்ட சாலை வளைவுகளில் வாகனங்கள் செல்கின்றன. அப்போது, எதிரே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழி விட்டு ஒதுங்கி செல்லும் போது, வாகன ஓட்டிகளின் கட்டுப்பாட்டை மீறி சில வாகனங்கள் கவிழும் அபாயம் உள்ளது.

இதனால், காஞ்சிபுரம்–பரந்துார் சாலையில், மேல்பொடாவூர், காட்டுப்பட்டூர் சாலை வளைவுகளில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, காஞ்சிபுரம்–பரந்துார் சாலை வளைவுகளில் வாகன விபத்தை தவிர்க்க சாலை வளைவுகளில் இரும்பிலான தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*************

Advertisement