டாக்டர் போல் தோற்றத்தில் ஏஐ வீடியோ; பிரபலங்களை கேலி செய்த அதிபர் டிரம்ப்

2


வாஷிங்டன்: அமரிக்க அதிபர் டிரம்ப் டாக்டர் போல் தோற்றத்தில் ஏஐ வீடியோவை வெளியிட்டு, நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்களைக் கேலி செய்தார்.

அரசியல் ரீதியாக தன்னை விமர்சிப்பவர்களை கிண்டல் செய்வதற்காக டிரம்ப் அவ்வப்போது ஏஐ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அதிபர் டிரம்ப், தன்னை ஒரு டாக்டர் போன்று சித்தரித்து வெளியிட்ட ஏஐ வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியது. தன்னை தீவிரமாக எதிர்க்கும் பிரபலங்களை நையாண்டி செய்யும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டார்.

வீடியோவில் வெள்ளை நிற லேப் கோட், கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் அணிந்து "டாக்டர் டிரம்ப்" ஆக தோன்றும் அவர், தன்னை எதிர்க்கும் பிரபலங்களுக்கு Trump Derangement Syndrome (TDS) என்ற கற்பனையான நோய் உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை முறை தன்னிடம் இருப்பதாகவும் கூறுகிறார். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை
ஜூலியா ராபர்ட்ஸ், ராபர்ட் டி நிரோ, வூபி கோல்ட்பர்க், ரோஸி ஓ டொனல் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நோயால் அவதிப்படுவதாக ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

சிகிச்சை முடிவில், போலிச் செய்திகளைப் பார்ப்பதை நிறுத்துங்கள், தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று டாக்டர் டிரம்ப் ஆலோசனை வழங்குவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு தொலைக்காட்சி மருத்துவ விளம்பரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக டிரம்ப்பை பகிரங்கமாக விமர்சித்து வந்த, நன்கு அறியப்பட்ட பல நடிகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்களின் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement