திமுக ஆட்சியில் 60% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதில் 25% இல்லவே இல்லை; அமைச்சர் கீர்த்தனா

20

கோவை: கடந்த திமுக ஆட்சியில் நிறுவனங்களுடன் 60% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதில் 25% இல்லவே இல்லை என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

கோவையில் அவரது பேட்டி: சிப்காட்போன்ற தொழிற்சாலைகள் அமையும் இடங்களில் சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் லஞ்சம் இல்லாத, வெளிப்படையான அரசாக அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்படும். இப்பொழுது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யும் போது, ஏதோ ஒரு கம்பெனியை அழைத்து வந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது வேலை கிடையாது. ஒவ்வொரு நிறுவனத்தின் பின்னணியையும் ஆராய்ந்து, பயனுள்ள ஒப்பந்தங்களை மேற்கொள்வதே எங்களது ஐடியா.

கோவையில் தொழில்துறையினர் முதலீடு செய்வதற்கு கேட்பது விமான நிலையம் விரிவாக்கம், அதற்கான வேலை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. கமிட்டி அமைத்து பணி நடக்கிறது, இந்த முறை நடந்துவிடும். சிறு,குறு நிறுவனங்கள் வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். சோலார் திட்டங்களைப் பொறுத்தவரை, கருவேல மரங்கள் நிறைந்த தரிசு நிலங்களில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இது நடைமுறைப்படுத்தினால் மிகுந்த பயன் கிடைக்கும்.

சோலார் பயன்பாட்டிற்கான 1% வரி விதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும். கடந்த ஆட்சி காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 25% இல்லவே இல்லை. திட்டங்கள் களத்தில் இல்லை. இதுபோல் இல்லாமல் தற்போதைய அரசு அறிவிக்கும் அனைத்துத் திட்டங்களும் 100 சதவீதம் செயல்பாட்டு கொண்டு வருவது தான் எங்களது நோக்கம். வெற்று பேப்பரில் கையெழுத்திடுவதை விடுத்து, 100% திட்டங்களைச் செயல்படுத்துவதே இந்த அரசின் இலக்கு.

எந்தவொரு இளைஞரும் வெளியே போய் ஹைதராபாத், பெங்களூருவில் வேலை தேடி இல்லாமல் இங்கேயே சென்னை, கோவை, மதுரையில் வேலைவாய்ப்புகளை கொண்டு வர எல்லா நடவடிக்கைகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். கோவையில் அமைய வேண்டிய செமி கண்டக்டர் ஆலை குஜராத்திற்குச் சென்றதை மீண்டும் கொண்டு வர மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செய்து கொண்டு இருக்கிறோம். அது கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறினார்.

Advertisement