சப்– கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரை ஆக்கிரமித்த விளம்பர போஸ்டர்கள்
செங்கல்பட்டு, ஜூலை 4–
செங்கல்பட்டு சப்– கலெக்டர் அலுவலக வளாக சுற்றுச்சுவரை ஆக்கிரமித்துள்ள, போஸ்டர்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு – மதுராந்தகம் சாலையில், செங்கல்பட்டு சப்– கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக சுற்றுச்சுவரில், அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் போஸ்டர்கள் ஓட்டி அசுத்தப்படுத்தி வந்தனர். மேலும், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கவன சிதறல் ஏற்பட்டு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
விபத்தை தவிர்க்கும் விதமாக அலுவலக சுற்றுச்சுவரில், தேசிய தலைவர்களின் ஓவியங்கள் வரையப்பட்டன.
இந்நிலையில், சுற்றுசுவரில் மீண்டும் அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள் முளைத்துள்ளன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வணிக ரீதியான விளம்பர போஸ்டர்களும் அதிகரித்துள்ளன. அரசு அலுவலக சுற்றுச்சுவரை ஆக்கிரமித்த போஸ்டர்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் ஓட்டியவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கையும், அபராதமும் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.