விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் வழங்கல்

வடமதுரை:வடமதுரை பாகாநத்தத்தில் இசை, கிரியேட் நிறுவனங்கள், நமது நெல்லைக் காப்போம் இயக்கம் இணைந்து 20வது தேசிய நெல் திருவிழா நடத்தின.

என்.கே.வி.எஸ்., மைய நிர்வாகி அசோகன் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் கீதா துவக்கி வைத்தார். இசை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா வரவேற்றார். ஆலோசகர் வி.சின்னையா, திட்ட இயக்குனர் சுரேஷ்கண்ணா, இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் டி.சின்னையா பங்கேற்றனர்.

பாரம்பரிய நெல் விதைகளான மைசூர் மல்லி, ரத்தசாலி, குள்ளங்கார், ஆத்துார் கிச்சலி, கருப்பு கவுனி, நாட்டுபொன்னி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், சுவர்ணமசூரி ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் பேராசிரியர் துரைசிங்கம் பேசுகையில், 'உணவு உற்பத்தியை பெருக்க அதிகளவில் உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது நஞ்சில்லாத உணவு தயாரிக்க மீண்டும் இயற்கை விவசாய முறைக்கு திரும்பும் நிலை வந்துள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு பெரிய வாய்ப்புகள் உள்ளது' என்றார்.

Advertisement