சூப்பர் ரிப்போட்டர் வடிகால் வசதி இன்றி தெருக்களில் கழிவுநீர் தேங்கும் அவலம் சங்கராபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி தவிப்பு

போடி, ஜூலை 4 -

சங்கராபுரம் ஊராட்சியில் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இக் கிராமத்தில் ரோடு, சுகாதார வளாகம், தெருவிளக்கு வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சின்னமனூர் ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி 2 வது வார்டில் கிழக்குப்பட்டி, மேற்குதெரு, கிழக்குதெரு, மந்தை குளம் தெரு, அழகர்சாமி கோயில் தெரு, நடுத்தெரு உள்ளிட்டவை அடங்கி உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பல தெருக்களில் ரோடு சேதம் அடைந்தும், தெருவிளக்குகள் எரியாததால் கிராமமே இருளில் மூழ்கி உள்ளது. கிழக்குகுளம் தூர்வாராததால் கழிவுநீர் தேங்கியுள்ளது. கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் கொசுகடியால் அவதிக்குள்ளாகின்றனர். மாரியம்மன் கோயில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டில் பக்க வாட்டு கற்கள் சேதமடைந்து வருகின்றன. ஊராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மக்கள் கூறியதாவது :

* கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் அவலம் :

செல்வி, சங்கராபுரம்: பழைய தண்ணீர் தொட்டி மேல் பகுதியில் செடிகள் வளர்ந்து தொட்டி சேதம் அடைந்து வருகிறது. இதில் பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகிறது. அருகே உள்ள ஓடையில் தடுப்புச்சுவர், வடிகால் இல்லாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் குப்பை, பாலிதீன் தேங்கி உள்ளது. மழைநீர் செல்ல வழி இன்றி குளம் போல கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அருகே உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் நிலை உள்ளது. தேங்கிய கழிவு நீரால் துர்நாற்றம் வீசி, கொசுத் தொல்லையால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும்.

* சேதடைந்த மின்கம்பம்:

பெரியராசு, சங்கராபுரம் : மாயக்கண்ணன் கோயில் மேற்கு தெருவில் சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்து உள்ளது. தெருக்களில் குப்பை வாங்க துாய்மை பணியாளர்கள் வராததால் அருகே உள்ள ஓடையில் குப்பை கொட்டி வருகின்றனர். ஜல் ஜீவன் திட்ட குடிநீர் பைப் லைன் அமைத்து இரு ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. இத்தெருவின் நடுவே அமைக்கப்பட்ட மின்கம்பம் சேதம் அடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இதனால் வாகன போக்கு வரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.



* பயன் இல்லாத சுகாரதார வளாகம்:

மாரியம்மாள், சங்கராபுரம் :

இரண்டாவது வார்டு கிழக்குப்பட்டி மேற்கு தெருவில் சில மாதங்களுக்கு முன்பு சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. இதற்கான பணி பாதியிலே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்யும் போது ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றன. ரூ.பல லட்சம் மதிப்பில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப் பட்டு 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மின்மோட்டார் பழுது காரணமாக பயன்பாடு இன்றி உள்ளது. பெண்கள் சுகாதார வளாகம் வசதி இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட சிமென்ட் ரோடுக்கான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement