பிரபல பல்பொருள் அங்காடிக்கு பொன்னேரி வியாபாரிகள் எதிர்ப்பு

பொன்னேரி, ஜூலை 4–

இந்தியாவின் பிரபலமான நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் பொன்னேரி வியாபாரிகள் மனு அளித்தனர்.

பொன்னேரி அடுத்த புலிக்குளம் கிராமத்தில், இந்தியாவின் பிரபலமான நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இதனால், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகும் எனக்கூறி, இதற்கு அப்பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், போலீஸ், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரபல நிறுவனத்தின் சில்லறை விற்பனை மையத்தில், மளிகை, துணி, பாத்திரம் மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும், ஒரே இடத்தில் கிடைத்துவிடும்.

இதனால், பொன்னேரி, மீஞ்சூர், அனுப்பம்பட்டு, இலவம்பேடு, பழவேற்காடு, தச்சூர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

சென்னை போன்ற பெருநகரங்களில், இந்நிறுவனத்தால் சில்லறை வணிகர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. கிராமப்புற பகுதிகளில், இதுபோன்ற பெரிய நிறுவனங்களின் கிளைகளை அமைக்கக்கூடாது என, விதிகள் உள்ளன.

எனவே, பிரபல நிறுவனத்தின் சில்லறை வணிக அங்காடி அமைவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement