தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்
புதுடில்லி: 'நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இதில் நீதித்துறை தலையிட தவறினால், அது, குடியரசின் முழுமையான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி கடிதம் எழுதி உள்ளது.
காங்., - திரிணமுல் - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு எழுதிய கடிதம்: நம் ஜனநாயகம் ஆபத்தான சூழலில் உள்ளது. இதை கருதியே, இந்த கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் கமிஷன், ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை பா.ஜ., மீறும் போது மவுனம் காக்கும் தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது. தேர்தல் கமிஷனின் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, தேவையற்றது.
பேரழிவுக்கு சமம். ஆவணங்களை சரிபார்ப்பது என்ற பெயரில், வாக்காளர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கி, 25 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது.
டில்லி, ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தல்கள், மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை. அவற்றில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். மேலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மீது துளி கூட நம்பிக்கை இல்லை.
ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும்போது, மக்கள் நீதியை தேடி நீதிமன்றங்களை நாடுகின்றனர். ஆனால், அங்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், மக்கள் யாரிடம் செல்வது? ஜனநாயகம் என்பது அரசியலமைப்பு அமைப்புகளின் செயல்பாட்டை சார்ந்தது.
அந்த அமைப்புகள் செயலிழக்கும்போது, ஜனநாயகம் அராஜகமாக மாறி விடுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட தவறினால், அது, குடியரசின் முழுமையான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், காங்., - திரிணமுல், சமாஜ்வாதி உட்பட, 23 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.பி.. கையெழுத்திட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், இண்டி கூட்டணியிடம் இருந்து சற்று விலகலை கடைப்பிடித்த தி.மு.க., பல கட்சிகளின் வலியுறுத்தலுக்கு பின், கடிதத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.