மா.செ.,வை சந்தித்த தங்கமணி ஆதரவாளர்கள்

பள்ளிப்பாளையம்:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள், நேற்று, புதிதாக நியமிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட செயலாளரை சந்தித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் சிலர் போர்கொடி துாக்கினர். இதில், நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியின், மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட செயலளராக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில், கடந்த மே, 20ல் நாமக்கல்லில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட, இரண்டு நகர செயலாளர்கள், இரண்டு ஒன்றிய செயலாளர்கள், ஒரு டவுன் பஞ்., செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, இரண்டு மாதமாக மாவட்ட செயலாளர் பாஸ்கரை, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் சந்திக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் பள்ளிப்பாளையம் தெற்கு, வடக்கு ஒன்றியம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் நகரம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., ஆகிய பகுதிகளை சேர்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் பஞ்., தலைவர்கள் என, ஏராளமானோர், மாவட்ட செயலாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் கூறுகையில், ''மாவட்ட செயலாளர் பாஸ்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அவர், கருத்து வேறுபாடுகளை மறந்து, சிறப்பாக பணியாற்றி உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என, கேட்டுக்கொண்டார்,'' என்றார்.

Advertisement