சுரங்கப்பாலம் கட்டுமான பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
திருப்பூர், ஜூலை 4–
குமரன் ரோட்டில், சுரங்கப்பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் பணிகளை முடித்து, போக்குவரத்துக்கு திறக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரின் பிரதான குமரன் ரோட்டில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் சந்திப்பில் கடந்த 2014-ம் ஆண்டு சுரங்கப்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பணி தொடங்கி 11 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இடத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆன நிலையில், கடந்த 2023-ல் தான் பணிகள் வேகம் எடுத்தன. 70 சதவீத பணிகள் முடிந்து கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திறக்கப்படவில்லை. தற்போது, மழைநீர் தேங்குவதைத் தடுக்க அணுகு தொட்டி கட்ட குழி தோண்டியபோது, நிலத்தடி நீர் ஊற்றெடுத்து வெளியேறுவதால் பணிகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன.
தற்போதைய நிலை வாகனங்கள் நெரிசலின்றி சுரங்கப்பாலத்திற்குள் செல்ல ஏதுவாக, பெரிய விநாயகர் கோவில் முன்பிருந்த ரவுண்டானா நேற்று இடித்து அகற்றப்பட்டது. பல ஆண்டுகளாக இழுபறியாக உள்ள இப்பணியை விரைந்து முடிக்கப் புதியதாகப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மழைநீர் வெளியேற்றும் தொட்டி அமைக்கும் பணி அடுத்த 10 நாட்களில் நிறைவடையும். வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவே ரவுண்டானா இடிக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு இந்த ஜூலை மாத இறுதிக்குள் பாலம் திறக்கப்படும் எனத் தெரிவித்தனர்.