ஹெச்.பி.வி., தடுப்பூசி போட சிறுமியர் தயக்கம்; அச்சம் வேண்டாம் என்கிறது மருத்துவத்துறை

சென்னை: 'கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும், ஹெச்.பி.வி., தடுப்பூசி போட்டுக் கொள்ள, சிறுமியர் தயக்கம் காட்டுவதால், அச்சம் வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில், இலவசமாக ஹெச்.பி.வி., என்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி போடும் திட்டத்தை, தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.

ஏழு லட்சம் இதற்கிடையில், நாடு முழுதும், 14 வயது சிறுமியருக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டத்தை, கடந்த பிப்., 28ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அனைத்து மாநிலங்களுக்கான தடுப்பூசியை, மத்திய அரசே இலவசமாக வழங்கி வருகிறது. தமிழகத்தில் இதுவரை, ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், ஹெச்.பி.வி., தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள், சுகாதார மையங்கள் வாயிலாக, இதுவரை, 91,748 சிறுமியருக்கு, தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

அதேநேரம், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை, 7 லட்சமாக உள்ளது. பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு, தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர்.

வதந்தியை நம்பாதீங்க!



இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும், முதன்மையான ஹெச்.பி.வி., வைரஸ் வகைகளுக்கு எதிராக, 90 சதவீதம் இந்த தடுப்பூசி பாது காப்பை வழங்குகிறது.

ஹெச்.பி.வி., வைரஸ் கர்ப்பப்பை வாயை மட்டுமல்லாமல், யோனி, பிறப்புறுப்பு, தொண்டை, வாய், மலக்குடல் போன்றவற்றிலும், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

இந்த தடுப்பூசியை, 14 வயதுக்குள் போட்டு கொள்வதன் வாயிலாக, வாழ்நாள் முழுதும் பாதுகாப்பளிக்கிறது. இந்த தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால், பாதுகாப்பு சான்று அளிக்கப்பட்டது. இவற்றால், பெரிய அளவிலான தீமைகள் எதுவும் இல்லை.

எனவே, பெற்றோர் தயங்காமல், தங்கள் குழந்தைகளுக்கு, ஹெச்.பி.வி., தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்த அச்சம் தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement