அம்மன் நகைகள் 50 சவரன் திருடிய பூசாரிக்கு 'காப்பு'

சென்னை: அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 50 சவரன் நகைகள் திருடிய பூசாரியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, முகப்பேரை சேர்ந்தவர் அனிருத், 45; நடன பயிற்றுநர். தன் வீட்டில் சிறிய கோவில் கட்டி, காளியம்மன் சிலை வைத்து வழிபட்டு வருகிறார்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷன், 35, என்ற பூசாரி, நான்கு ஆண்டுகளாக, அம்மனுக்கு பூஜை செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன், காளியம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோயின. அம்மனுக்கு, இந்த நகைகளை மாற்றி மாற்றி அணிவித்து பூஜை செய்வது வழக்கம்.

மொத்தம் 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடுபோனதாக, ஜெ.ஜெ.நகர் போலீசில், அனிருத் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், பூசாரி பிரியதர்ஷன், நகைகளை சிறுக சிறுக திருடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், பிரியதர்ஷனை கைது செய்தனர். அவரிடமிருந்து, 30 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement