தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது; அமெரிக்காவில் பெட்னா தமிழ் விழாவில் அண்ணாமலை பேச்சு

31



நமது நிருபர்




"தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது. தமிழர் என்ற வட்டம் பெரியதாக இருக்க வேண்டும்" என அமெரிக்காவில் நடந்த பெட்னா தமிழ் விழாவில் அண்ணாமலை பேசுகையில் தெரிவித்தார்.

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் நியூ ஜெர்சியில் நடந்த தமிழ் விழாவில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: மலேசியாவாக இருக்கட்டும், சிங்கப்பூராக இருக்கட்டும்.

சாதாரணமாக தெருவில் இருக்கும் வியாபார நண்பர்கள் முதல் ஜனாதிபதி வரை தமிழர்கள் இருப்பதை பார்க்கிறோம். நாம் தயவு செய்து தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்க கூடாது. ஹிந்து என்கிற வட்டத்துக்குள் அடைக்க கூடாது. இஸ்லாமியர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது.


அற்புதமான நூல்




கிறிஸ்துவர் என்ற வட்டத்துக்குள் அடைக்க கூடாது, எல்லாத்தையும் தாண்டி தமிழர் என்கிற வட்டம் பெரிய வட்டமாக இருக்க வேண்டும், அதில் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

இதனை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கு காரணம், நம்முடைய தமிழ் மொழியில் புறநானூறு 2 ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிற்கக்கூடிய அற்புதமான நூல். அதில் 182ம் பாடலை படிக்க வாய்ப்பு இருந்தால் உங்கள் குழந்தைகளை படிக்க சொல்லுங்கள். உண்டாலம்ம, இவ்வுலகம் என்ற பாடலாகும்.

அஞ்சாமல் உழைத்து...

ஒரு தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்றால் அமிர்தமே கிடைத்தாலும் அதனை பகிர்ந்து உண்ண வேண்டும். சினம் கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். தூங்காமல், அஞ்சாமல் உழைத்து, புகழுக்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

உலகையே கூலியாக கொடுத்தாலும் சான்றோர் பழிச்சொல் கிடைக்க பெறாத தமிழ் இனமாக இருக்க வேண்டும். தன் முயற்சியை பிறர் நலனுக்காக ஆக்குபவர்களாக இருக்க வேண்டும். கல்விக்கான முக்கியத்துவத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறோம். சமுதாயம் வேண்டும் என்றால் ஒருவன் மேலே, ஒருவன் கீழே என்று சொல்லலாம்.


குரல் கொடுங்க




சமுதாயம் வேண்டுமென்றால் ஒருவனை மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று சொல்லலாம். அறிவு, கண்ணியம், ஒழுக்கம் இருக்க கூடிய மனிதனை மன்னனே என்னோடு படைக்கு வாங்க என்று சொல்ல கூடிய தகுதி கல்விக்கு மட்டும் தான் இருக்கிறது. ஒரு மனித குலம் அறத்துடன் எப்படி வாழ வேண்டும் என்று சொன்ன அற்புதமான நிலத்தில் இருந்து வந்து இருக்கிறோம்.

பெட்னா அமைப்பு வரும் காலத்தில் இன்னும் சிறப்போடு எல்லோரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் குரல் கொடுக்கும் அமைப்பாக பெட்னா இருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement