ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடும் 'டாடா ஸ்டீல்'

'டாடா ஸ்டீல்' நிறுவனம், லாபம் குறைந்த ஒரு நிறுவனமாக இருந்த நிலையிலிருந்து மாறி, அதிக லாபம் தரும் நிறுவனமாக தற்போது மாறி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்க பூஷன் ஸ்டீல்ஸ், என்.ஐ.என்.எல்., போன்ற நிறுவனங்களை கையகப்படுத்தியதும், கலிங்கா நகர் போன்ற இடங்களில் விரிவாக்கம் செய்ததும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து கட்டமைப்பையே மாற்றியமைத்துள்ளன.
Latest Tamil News

Tamil News

இந்தியாவின் உள்நாட்டு ஸ்டீல் தேவை 2026ம் ஆண்டில் 7.4 சதவீதமாக விரிவடையும் என்றும், 2027ம் ஆண்டில் இது 9.2 சதவீதமாக வேகமெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், டாடா ஸ்டீல் நிறுவனம் சரியான நேரத்தில் தனது உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரித்திருப்பது, ஐரோப்பாவில் உள்ள கட்டமைப்பு சார்ந்த பின்னடைவுகளை சமன் செய்து, அதிக லாபம் தரும் உள்நாட்டு விற்பனை அளவை கைப்பற்ற அதற்கு வழிவகை செய்கிறது.

இந்திய சந்தை

பிராந்திய அளவிலான பிரிவை ஆராய்ந்து பார்த்தால், விற்பனை அளவின் செயல்திறனுக்கும் டாலர் மதிப்பில் கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள செயல்பாட்டு வேறுபாடுகள் தெரியவருகின்றன. இந்திய சந்தை மொத்த விற்பனை அளவில் 81 சதவீத (வருடத்துக்கு 22.50 மில்லியன் டன்) பங்கை கொண்டுள்ளது.

ஆனால், வருவாயில் 60 சதவீத (1,40,302 கோடி ரூபாய்) பங்களிக்கிறது. சொந்தமாக இரும்பு தாது சுரங்கங்களை ஒருங்கிணைத்துள்ளதால், உற்பத்தி செலவு குறைந்து, அதிக லாப வரம்புடன் கூடிய வேகமான உள்நாட்டு விற்பனையை இது காட்டுகிறது.

சர்வதேச பிரிவு இது மொத்த உற்பத்தி அளவில் 19 சதவீதம் ( வருடத்துக்கு 5.20 மில்லியன் டன்) மட்டுமே பங்களிக்கிறது, ஆனால், வருவாயில் 40 சதவீதம் (91,838 கோடி ரூபாய்) பங்கை கொண்டுள்ளது. இது அதிக மதிப்புமிக்க பிரத்யேக உலோக கலவைகள் மற்றும் யூரோ மதிப்பு அடிப்படையிலான விலை நிர்ணயம் ஆகியவற்றின் விளைவாகும்.

இருப்பினும், பின்நோக்கிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும் மற்றும் மறுசீரமைப்பு சிக்கல்களாலும் இதன் செயல்பாட்டு லாப வரம்புகள் அடிப்படை ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வளர்ச்சி காரணிகள்

டாடா ஸ்டீல் நிறுவனம் ஜார்கண்ட் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் உள்ள இரும்பு தாது மற்றும் மிக முக்கிய கோக்கிங் நிலக்கரி ஆகியவற்றின் மீது முழுமையான ஒருங்கிணைப்பை பராமரித்து வருகிறது.

இது, சர்வதேச அளவில் ஏற்படும் கடுமையான கனிம விலை மாற்றங்களின் தாக்கங்களிலிருந்து அதன் உள்நாட்டு செயல்பாடுகளை பாதுகாப்பதுடன், மூலப்பொருள் உள்கட்டமைப்பு இல்லாத பிற உள்நாட்டு போட்டியாளர்களால் வெல்ல முடியாத அளவிற்கான ஒரு வலுவான உற்பத்தி செலவு பாதுகாப்பை உருவாக்குகிறது.

மதிப்பு கூட்டுதல் நிறுவனம் அதிக லாபம் தரும் பிராண்டட் நுகர்வோர் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வணிகத்தின் மதிப்பை திட்டமிட்டபடி உயர்த்தி வருகிறது.

டாடா டிஸ்கான்: உள்கட்டமைப்பு மற்றும் சில்லறை கட்டுமான துறைக்கானது

டாடா ஸ்டீலியம்: வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான, 'கோல்டு ரோல்டு' தாள்கள்

டாடா அஸ்ட்ரம்: 'பிரீமியம் ஹாட் ரோல்டு' பயன்பாடுகள்.

இத்தகைய கட்டமைப்பு மாற்றம், விலையில் நிலையற்ற தன்மையும் குறைந்த லாப வரம்பும் கொண்ட 'கமாடிட்டி ஹாட்-ரோல்டு காயில்' ஸ்பாட் மார்க்கெட்களின் மீதான நிறுவனத்தின் சார்பை குறைக்கிறது.

கார்பன் உமிழ்வு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து தப்பிக்க கார்பன் உமிழ்வை குறைத்தல் விஷயத்தில், இங்கிலாந்து ஆலைகளை, 'மின்சார வில் உலை' தொழில்நுட்பத்திற்கு மாற்றுவது மற்றும் லுாதியானாவில் பழைய இரும்புகளை பயன்படுத்தும் ஆலையை தொடங்கியிருப்பது ஆகியவை, ஐரோப்பாவின் வரவிருக்கும் கடுமையான 'கார்பன் எல்லை வரி' சட்டத்திலிருந்தும், உள்நாட்டு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்தும் நிறுவனத்திற்கு நேரடி பாதுகாப்பை வழங்குகின்றன.

முதலீட்டு அபாயங்கள்
இங்கிலாந்தில் உள்ள ஆலைகளை மறுசீரமைப்பு செய்ய தொடர்ந்து பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

தாய் நிறுவனம் இதற்கு பக்கபலமாக இருந்தாலும், வெளிநாட்டு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் செயல்பாட்டு நஷ்டங்கள், ஒட்டுமொத்த நிறுவன குழுமத்தின் லாப விகிதத்தை குறைத்து கொண்டே இருக்கின்றன.

எதிர்கால திட்டங்கள் பிற நாடுகளில் இருந்து மலிவான விலையில் ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாலும், சில வர்த்தக பாதுகாப்பு விதிகளாலும், உள்நாட்டில் ஹெச்.ஆர்.சி., விலை ஒரு டன்னுக்கு சுமார் 54,000 ரூபாய் என்ற அளவில் உறுதியாக உள்ளது. உள்கட்டமைப்பு துறையில் தேவை அதிகரித்துள்ளதால், வரும் காலங்களில் ஸ்டீல் விலை டன்னுக்கு 2,300 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை படிப்படியாக உயரும் என்று நிறுவன நிர்வாகம் கணித்துள்ளது.

செயல்பாட்டு திறன்

கடந்த 2026 நிதியாண்டில் இந்தியாவின் கச்சா ஸ்டீல் உற்பத்தி, முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகரித்து வருடத்துக்கு 23.48 மில்லியன் டன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. கலிங்கநகர் 2ம் கட்ட ஆலையின் உற்பத்தி சீராகி வருவதால், வரும் 2027 நிதியாண்டிலும் விற்பனை அளவு தொடர்ந்து அதிகரிக்கும். இது நிறுவனத்தின் லாபத்தை மேலும் உயர்த்த உதவும்.


பொறுப்பு துறப்பு


இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Advertisement