ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு வலுக்கிறது: போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு


ராவல்கோட்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானை கண்டித்து அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக பாதித்துள்ளது. அரசியல் ரீதியாக தாங்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி போராடி வரும் அவாமி அதிரடி குழு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் பாகிஸ்தான் அரசு, அப்பகுதிக்கு செல்லும் உணவு மற்றும் மருந்து பொருட்களை தடை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போராட்டக்குழுவின் முக்கிய தலைவர்களையும் கைது செய்துள்ளது. இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் அடக்குமுறை மற்றும் அத்துமீறலை காட்டுவதாக போராட்டக்குழு குற்றம்சாட்டி உள்ளது. பாகிஸ்தானுக்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே பாகிஸ்தானின் அத்துமீறல், நிர்வாக தோல்வியை கண்டித்தும், சட்டவிரோதமாக கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்தார் குலாம் ஹூசைன் கான் விளையாட்டுமைதானத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியோர்களும் அடக்கம்.

அங்கு பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடக்கிறது. துதியால் என்ற இடத்தில் அமைதியாக போராட்டத்தி்ல் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இதனை கண்டு அஞ்சாமல், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்து வந்து கொண்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

Advertisement