எங்கள் நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்; இந்தியாவுக்கு வெனிசுலா அதிபர் நன்றி

1

கராகஸ்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு உதவி வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அந்நாட்டின் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 24ம் தேதி வெனிசுலாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சுமார் 38,500 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கிின் உடல்களை வைப்பதற்காக, ஐநாவிடம் வெனிசுலா அரசு 10,000 பைகளை ஆர்டர் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவிற்கு மீட்பு பணிகளுக்கும், மருத்துவ மற்றும் அவசரகால உதவிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்து வருகின்றன. 'ஆபரேஷன் அமிஸ்தாத்' என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை அங்கு தீவிர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், வெனிசுலாவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா, பிரிட்டன், கத்தார், பிரான்ஸ், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் மீட்புக் குழுவினருக்கு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; இக்கட்டான இந்தத் துயரமான நாட்களில் வெனிசுலாவுக்குப் பக்கபலமாக நின்று விலைமதிப்பற்ற சேவையாற்றிய இந்தியா, பிரிட்டன், கத்தார், பிரான்ஸ், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் மீட்புக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் கடமை உணர்வை வெனிசுலா மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். வெனிசுலா மீண்டும் புத்துயிர் பெற்று எழும்!, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement