திண்டுக்கல், தேனி மாவட்ட இணைப்பு ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்

ஆண்டிபட்டி:திண்டுக்கல், தேனி மாவட்டங்களை இணைக்கும் ஆண்டிபட்டி - புள்ளிமான்கோம்பை ரோடு குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ஆண்டிபட்டியில் இருந்து டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. போக்குவரத்து அதிகமானதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரோடு அகலப்படுத்தப்பட்டது. இப்பகுதியில் செயல்படும் கல்குவாரி, கிரஷர்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கிறது. இதனால் ரோடு பல இடங்களில் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளது. சமீபத்தில் இந்த ரோட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு பாலம் அமைக்கப்பட்டது.

சிறு பாலம் அமைக்கப்பட்ட இடங்களிலும் ரோடு பணிகள் முழுமை பெறவில்லை. தற்போது இந்த ரோட்டில் வண்ணாத்திப்பாறை பகுதியில் இருந்து புள்ளிமான்கோம்பை வரையும் ரோட்டில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவில் வரும் வாகனங்களுக்கு மேடு பள்ளங்கள் தெரியாததால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தை சந்திக்கின்றனர். மேடு பள்ளங்களை சரி செய்ய பல இடங்களிலும் கிரஷர் துாசி கலந்து ஜல்லி கொட்டப்பட்டுள்ளது. கொட்டப்பட்ட இடங்களில் பல வாரங்களாகியும் தார் கலவை அமைக்காததால் தூசுகள் பறந்து சுவாச கோளாறு ஏற்படுவதுடன் ரோட்டில் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலையில் ஏற்படுகிறது. ரோடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement