ஊத்துக்காடு பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
வாலாஜாபாத், ஜூலை 7–
ஊத்துக்காடு, ஜே.எஸ்., நகர் பூங்கா பகுதியில் தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஊத்துக்காடு கிராம மக்கள் சார்பில் வெங்கடேசன் என்பவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் நடைபயிற்சி மற்றும் சிறுவர் விளையாட்டு பொழுதுபோக்கு போன்றவைக்கு நான்கு பூங்காக்கள் அமைந்துள்ளன. இந்த பூங்கா அமைந்துள்ள அனைத்து இடங்களும் அரசுக்கு தானம் வழங்கப்பட்ட நிலங்களாக உள்ளன.
இந்நிலையில், ஜே.எஸ்.நகர்., பகுதியில் தனியார் திருமண மண்டபத்தையொட்டி உள்ள அரசு பூங்கா நிலத்தில் தனி நபர்கள் சிலர் சேதப்படுத்தி கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர்.
பூங்கா அருகே உள்ள தனியார் வீட்டு மனை பிரிவிற்கு இந்த சாலையை, வழி பாதையாக காட்டி மனை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, ஊத்துக்காடு ஜே.எஸ்.நகர்., பூங்கா ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டு தருவதோடு ஆக்கிரமிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.