அகத்தின் அழகு முகத்தில் தெரியுது: பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடங்கள் உவ்வே

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், பயணியர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. அதேபோன்று, ஆனைமலை, வால்பாறை வழித்தட பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகின்றனர்.

இந்த இரு பஸ் ஸ்டாண்ட்களையும், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்துகின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் போதிய பரமாரிப்பின்றி உள்ளதால் பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் போதிய பராமரிப்பின்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. பயணியர், கழிப்பிடம் அருகே உள்ள திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர்.

ஒரு சிலர், வேறு வழியின்றி கடும் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு இயற்கை உபாதை கழிக்க செல்கின்றனர். கழிப்பிடம் அருகே போதிய பராமரிப்பின்றியும், துர்நாற்றத்துடனும் உள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் நீர், பஸ்கள் நிறுத்தப்பகுதியை சூழ்ந்து நிற்பதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. கட்டண கழிப்பிடத்திலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், கோவை பஸ்கள் வெளியேறும் பகுதி அருகே வணிக பயன்பாட்டுக்காக உள்ள காலியிடம் பராமரிப்பின்றி இருப்பதால், அங்கு சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, கழிப்பிடத்தை பராமரிக்கவும், பயன்பாடு இல்லாத கட்டடத்தை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement