கோடம்பாக்கம், வியாசர்பாடி ஐவர் கால்பந்தில் ‘சாம்பியன்’

சென்னை: ஐவர் கால்பந்து போட்டியில் வயது பிரிவுகளின் அடிப்படையில் கோடம்பாக்கம், கோபாலபுரம் மற்றும் வியாசர்பாடி அணிகள் சாம்பியன் கோப்பையை வென்று அசத்தின.

சென்னை சாக்கர் ஸ்கூல் அகாடமி சார்பில், தி.நகரில் உள்ள பசும்பொன் அரங்கில் நடந்து வரும், ஐவர் கால்பந்து தொடரில், ஆறு வயது முதல் 65 வயது வரை, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.

இதில், நேற்று நடந்த 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவின் இறுதிப்போட்டியில், வியாசர்பாடி மெட்ராஸ் ஹீரோ அணி, மீனம்பாக்கம் ஜாலி எப்.சி., அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய வியாசர்பாடி வீரர்கள், 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை முத்தமிட்டனர்.

* 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கோடம்பாக்கம் டி.எம்.எப்., மற்றும் சைதாப்பேட்டை யுனைடெட் பாந்தர்ஸ் அணிகள் மோதின. கடைசி வரை பரபரப்பாக நீண்ட இந்த ஆட்டத்தில், 2 – 1 என்ற கோல் கணக்கில் கோடம்பாக்கம் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது

* 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், அனுபவம் மிளிர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கோபாலபுரம் எச்.எப்.சி., அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. பல்லாவரம் ‘ஸ்பைடர்’ அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

Advertisement