மரித்தோர் உடலை எரிக்க மயானம் இல்லாத அவலம்

அலங்காநல்லுார்: ராஜாக்கள்பட்டி ஊராட்சி மறவபட்டி காலனியில் அருந்ததியர் மயானம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், இறந்தவர்களின் உடலை ரோட்டோரம் வைத்து எரிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இங்கு அருந்ததிய சமூகத்தை சேர்ந்த 100 குடும்பங்கள் வசிக்கின்றன. பிற சமூக மக்களுக்கான மயானம் பாலமேடு- வலையபட்டி ரோட்டில் உள்ளது. அதனருகே ரோட்டோர புளிய மரங்களுக்கு இடையே ஆக்கிரமிப்பு போக 5 சென்டுக்கும் குறைவான இடத்தை அருந்ததிய சமூகத்தினர் மயானமாக பயன்படுத்துகின்றனர்.

இறந்தவர்கள் உடலை இங்கு எரிக்கும் போது கிளம்பும் புகையால் ரோட்டில் செல்வோர் அச்சமடைகின்றனர். இரவு நேரம் அந்த ரோட்டில் நடமாடவே தயங்குகின்றனர்.

தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா கூறியதாவது: மாநிலம் அளவில் கிராமங்களில் இப்பிரச்னை உள்ளது. கடந்த ஆட்சியில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆதி திராவிடர், அருந்ததியர் சமூகத்தினருக்கு மயான வசதி, அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றுதல், அடிப்படை வசதிகள் செய்வது போன்றவற்றை வலியுறுத்தி சமூக நீதித்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆதிதிராவிட நலத்துறை செயலரிடம் அறிக்கை கேட்டுள்ளது. த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement