மின்வாரியம் - ஐஐடி சென்னை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்; அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

5

சென்னை: உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழக மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மின்சார வாரியம் - ஐஐடி சென்னை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்; தமிழகத்தின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தி, மின் சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில்,மின்சார வாரியம் மற்றும் ஐஐடி சென்னை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், மின்கட்டமைப்பை மேம்படுத்துதல், செயல்திறனை உயர்த்துதல், செலவினச் சிக்கனத்தை ஏற்படுத்துதல், நிபுணத்துவ தொழில்நுட்ப ஆய்வுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு , இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு , டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுவழி சார்ந்து முடிவெடுத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கிறது.

மேலும், கூட்டு ஆராய்ச்சி, கொள்கை ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள், திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால மின்துறை தேவைகளுக்கான புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கான நீண்டகால கூட்டாண்மைக்கும் இவ்வொப்பந்தம் வலுவான அடித்தளமாக அமையும். மேலும், இதன்மூலமாக நிலைத்த மற்றும் நீடித்த மின்கட்டமைப்பினை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகம் வழங்க இயலும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement