திரிணமுல் காங்கிரஸ் வங்கி கணக்குகளை கையாள சிறப்பு அதிகாரி நியமனம்; மம்தா அணிக்கு தற்காலிக நிம்மதி

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக முடக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அணியின் வங்கி கணக்குகளில் இருந்து அன்றாட செலவுகளை மேற்கொள்ள, கொல்கட்டா உயர் நீதிமன்றம் சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பின், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது.

அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களான ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சாந்திபன் சாஹா அடங்கிய அதிருப்தி அணியினர், பிதான் நகர் சைபர் கிரைம் போலீசில் ஜூன் 18ல் புகார் அளித்தனர்.

அதில், 'தனியார் வங்கியில் உள்ள திரிணமுல் காங்., கட்சியின் மூன்று கணக்குகளில் உள்ள பணம் குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டது. எனவே, இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாளே மூன்று வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதி கோரி, மம்தா தரப்பில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா, வரும் செப்., 30 வரை மம்தா தரப்பு, கட்சியை நடத்துவதற்கான அன்றாட செலவுகள் மேற்கொள்ள வசதியாக ஓய்வு பெற்ற நீதிபதி சுப்ரதா தாலுக்தரை சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.

சிறப்பு அதிகாரிக்கு மாத ஊதியமாக அதே வங்கி கணக்கில் இருந்து, மாதம் 1.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன்படி, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட இரு நிர்வாகிகள் கையெழுத்திட்டு வழங்கும் காசோலையை, சிறப்பு அதிகாரி வங்கிக்கு அனுப்பி பணத்தை பெற்று தருவார்.

Advertisement