அமைச்சர் பூபேந்திர யாதவ் ராஜினாமா?

1

புதுடில்லி: டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம், மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்யப் போகிறாரா என்பது பற்றித்தான்.

அவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ். ஒரே நாளில் இந்த அமைச்சரின் நான்கு செயலர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவால் இந்த நடவடிக்கை என சொல்லப்படுகிறது.

இந்த நால்வரும் ஊழல் செய்தனரா அல்லது அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டா என, டில்லி முழுக்க பேச்சு அடிபடுகிறது. எதிர்க்கட்சிகளும் இதை பெரும் விஷயமாக எடுத்துக்கொண்டுள்ளன.

பூபேந்திர யாதவ் கட்சியில், 'பவர்புல்' ஆனவர்; உள்துறை அமைச்சருக்கு நெருக்கமானவரும் கூட. பா.ஜ.,வின் தேசிய தலைவர் இவர் தான் என, ஒரு பேச்சு இருந்தது. ஆனால், நிதின் நபின் தலைவராகி விட்டார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் பொறுப்பாளராக இருந்து, மாபெரும் வெற்றியை தேடி தந்தவர் பூபேந்திர யாதவ்.

அப்படியிருந்த இவருக்கு, இப்போது என்ன பிரச்னை? கட்சி தலைவர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர். 'மோடிக்கும், அமித் ஷாவிற்கு மட்டும் தான் பூபேந்திர யாதவ் குறித்த விஷயம் தெரியும்' என்கின்றனர்.

'விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கிறது. அப்போது, பூபேந்திர யாதவ் நீக்கப்படுவார்' என்றும் பேச்சு அடிபடுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சரவை என்றாலே ஊழல் குற்றச்சாட்டுகள் தான் போலிருக்கிறது. காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ், ஜெயந்தி நடராஜன், தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா ஆகியோர் இந்த துறையின் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

Advertisement