தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

கரூர்:''தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய்தான் இருப்பார்,'' என, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.

கரூர் வெண்ணைமலையில், த.வெ.க., சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கடந்த, 1972ல், எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை ஆரம்பித்த போது, விசில் அடிப்பவர்களை வைத்து ஆட்சியை பிடிக்க முடியுமா என கேட்டனர். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக, 1977ல் எம்.ஜி.ஆர்., ஆட்சியை பிடித்து முதல்வரானார். இனி தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய் மட்டும்தான் இருப்பார். எம்.ஜி.ஆரின் வீரம், ஜெயலலிதாவின் அன்பும், ஒன்று சேர்ந்த தலைவராக விஜய் உள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள, இனாம் நிலம் பிரச்னையை முதல்வர் விஜய், தனி கவனம் செலுத்தி தீர்த்து தர வேண்டும். தமிழகம் முழுவதும், இனாம் நிலம் பிரச்னை உள்ளது. கரூரில்தான் அதிகம் உள்ளது. மக்கள் மனதை வென்ற முதல்வராக விஜய் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட பஞ்., யூனியன் முன்னாள் துணைத்தலைவர் தானேஷ் குமார், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பரசன், சுரேஷ், தினேஷ் குமார் மற்றும் சஞ்ஜித், கண்ணன் உள்பட த.வெ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement