அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு; தனியார் பள்ளிகளில் கணிசமாக அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

1

புதுடில்லி: 'நாடு முழுதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 86 லட்சம் குறைந்துள்ளது; அதே நேரம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 88 லட்சம் அதிகரித்துள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகள் உட்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை மத்திய அரசின் அதிகாரபூர்வ டிஜிட்டல் தரவுதளமான யூ.டி.ஐ.எஸ்.இ., எனப்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு தொகுத்து வருகிறது. இந்த தரவுதளம் 2025-26ம் கல்வியாண்டுக்கான அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுதும் 2023-24 கல்வியாண்டில், மழலையர் முதல் மேல்நிலை பள்ளி வரை 24.80 கோடி மாணவர்கள் படித்து வந்தனர். 2025-26 கல்வியாண்டில், இந்த எண்ணிக்கை 8.26 லட்சம் குறைந்து, 24.72 கோடியாக இருந்தது

அரசு பள்ளிகளில் 12.75 கோடியாக இருந்த மாணவர் சேர்க்கை, 86 லட்சம் சரிந்து, 11.89 கோடியாக குறைந்துள்ளது

இதே காலக்கட்டத்தில், தனியார் பள்ளிகளில் 9 கோடியாக இருந்த மாணவர் சேர்க்கை, 9.89 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, 88 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்

பள்ளிகளின் மொத்த எண்ணிக்கையும், 14.72 லட்சத்தில் இருந்து, 14.67 லட்சமாக குறைந்துள்ளது

ஆசிரியர்களின் எண்ணிக்கை 98.08 லட்சத்தில் இருந்து 1.03 கோடியாக அதிகரித்துள்ளது

மாணவர்க ள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை 12,954ல் இருந்து 5,663 ஆகவும், ஒரே ஆசிரியர் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 1.11 லட்சத்தில் இருந்து 1.01 லட்சமாகவும் குறைந்துள்ளது

மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் கல்வி விகிதம் அதிகரித்துள்ளது. எனினும், ஆரம்ப பள்ளிகளில் மாணவர் தக்கவைப்பு லேசாக குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement