அ.தி.மு.க., புலி; த.வெ.க., பூனை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

சோழவந்தான்: 'புலி இளைத்தால் பூனை விளையாடுவது போல, அ.தி.மு.க., புலி சற்று இளைத்ததால், த.வெ.க., பூனை தற்போது விளையாடிப் பார்க்கிறது' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடினார்.

திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க., செயல்வீரர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பெரியசாமிமணி தலைமை வகித்தார். மாணவரணி செயலாளர் சோழசிவராஜன் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் பேசியதாவது:

அ.தி.மு.க.,வை விட்டுச் சென்றவர்களை நினைத்தால் பரிதாபமாக, வருத்தமாக உள்ளது. அவர்களுக்கு கேடுகாலமும், கட்சிக்கு நல்ல காலமும் தொடங்கிவிட்டது. ஐந்து கட்சி அமாவாசை நிர்மல்குமார் போன்றோர் அ.தி.மு.க., அழிந்துவிடும் என்கின்றனர். அ.தி.மு.க.,வை அழிக்க பிரபஞ்சத்திலேயே எவரும் பிறக்கவில்லை.

விஜய் துாய ஆட்சி தருவோம் என்றார். இன்று மது விலை உயர்வுக்காக ஆலை உரிமையாளர்களிடம் வாங்கிய ரூ.800 கோடி எந்த 'பவர் சென்டருக்கு' சென்றது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு எம்.எல்.ஏ.,மாவட்ட செயலாளர்கள் வரை பணம் சென்றுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவரை டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கிறீர்களே உங்களுக்கு மானம், வெட்கம் இல்லையா.

முதல்வர் விஜய் சட்டம் தெரியாமல் குதிரை பேரம் நடத்துகிறார். அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் குதிரை பேரம் குறித்து அளித்த புகார் இன்றும் நிலுவையில் உள்ளது. இன்று அரியாசனத்தை வைத்து ஆபர் கொடுத்து அடுத்த கட்சி ஆட்களை இணைத்து வருகின்றனர்.

அ.தி.மு.க., தொண்டனின் வயிறு பற்றி எரிந்தால் விஜயின் நிலை என்னாகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசுவதாக நினைக்கலாம். காலம் மாறும். காட்சிகள் மாறும். ஆட்சியும் மாறும் என்றார்.

Advertisement