காரைக்குடியில் ஆவின் பால்,நெய்க்கு தட்டுப்பாடு:பூத்களுக்கு வந்து ஏமாறும் மக்கள்

காரைக்குடி:காரைக்குடி ஆவின் பூத்களில் பட்டர், நெய் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைவதோடு பால் விற்பனையிலும் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழகத்தில் ஆவின் வாயிலாக நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
செய்யப்பட்டு பால், தயிர், நெய், பட்டர், பால்பவுடர், இனிப்பு என பல்வேறு பொருட்கள்
தயாரிக்கப்படுகிறது. பால் மூலம் போதிய லாபம் இல்லாத நிலையிலும் மதிப்பு கூட்டு பொருட்கள் மூலம் லாபத்தை ஈட்டி வருகிறது.

காரைக்குடி ஆவின் நிறுவனம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பால்
உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்து பால் விநியோகம் செய்கிறது.காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. காரைக்குடி பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆவின் பூத்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பல வாரங்களாக ஆவின் பூத்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு, நெய், பட்டர் உள்ளிட்ட பொருட்களும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில்; கடந்த சில மாதங்களாகவே, பூத்களில் பால் முறையாக
கிடைப்பதில்லை. சிறிது நேரத்திலேயே தீர்ந்து விடுகிறது. பட்டர், நெய் உள்ளிட்டவற்றை பார்த்தே 6 மாதங்கள் ஆகிவிட்டது.தட்டுப்பாடு இல்லாமல் பால், நெய், பட்டர் உள்ளிட்டவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆவின் பொது மேலாளர் நாகராஜன் கூறுகையில்: காரைக்குடி ஆவின் மூலம், பால்
விநியோக பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டை விட 2 ஆயிரம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பட்டர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை அதிகம். வெளியே பட்டர் கொள்முதல் செய்து, நெய் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் பெரிதாக லாபமும் இருப்பதில்லை.


ஆனாலும் பொதுமக்களின் தேவையை கருதி போதுமான அளவு நெய் வினியோகம்
செய்யப்படுகிறது. தற்போது பட்டரை உருக்கி நெய் தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. தொடர்ந்து, நெய் முறையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement