கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவுக்கு திமுக கடிதம்

10

சென்னை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் விஜய் இன்று அரசு பணிக்கான ஆணையை வழங்க உள்ளார்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான சி.பி.ஐ., விசாரணையை மேற்பார்வையிடும், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுக்கு, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கரூர் த.வெ.க., பிரசார கூட்டத்தின்போது, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, அரசு பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று கரூர் சென்று வழங்க உள்ளார்.

வழக்கு விசாரணையில் சாட்சிகளாக உள்ள அந்த குடும்பத்தினர் மீது, எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படக் கூடாது.

அதற்கு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, தலைமை செயலரும், சி.பி.ஐ.,யும் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பணி நியமனம் வழங்க, எந்த எதிர்ப்பும் இல்லை.

ஆனால், சி.பி.ஐ., விசாரணைக்கு உட்பட்ட, அதே சம்பவத்தின் முக்கிய சாட்சிகளுக்கு வழங்கப்படும் நலன்கள், விசாரணையின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து, இது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும்.

இவ்வழக்கின் சாட்சிகள் மீது, அரசின் நலத்திட்ட உதவிகளால், எந்த தாக்கமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement