குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்
மதுரை: கைரேகை பதிவு விடுபட்ட குடும்ப உறுப்பினர்கள் உடனே ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அவரது தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். அந்த்யோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்., கார்டுகள்), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் (என்.பி.எச்.எச்., கார்டு) உள்ளவர்களில் பலர் கைரேகை பதிவு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு பதிவு விடுபட்டோரில் 10 வயதுக்கு குறைவான பள்ளிக் குழந்தைகள், வெளியூர் சென்றவர்கள் உள்ளனர்.
கைரேகை விடுபட்டவர்கள் ரேஷன்கடை விற்பனையாளரை அணுகி கைரேகையை பதிவு செய்ய வேண்டும். வெளியூரில் வசிப்போர், தாங்கள் வசிக்கும் பகுதி ரேஷன் கடைகளிலேயே ஆதார் அட்டையை காட்டி கைரேகை பதிவை மேம்படுத்தலாம்.
5 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர் அவர்களது கைரேகை பதிவை அருகில் உள்ள தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் (ஒன்றிய அலுவலகம்) மற்றும் இதர இடங்களில் செயல்படும் ஆதார் மையங்களில் புதுப்பித்து அதன்பின்னர் ரேஷன் கடைகளில் உள்ள ‘பி.ஓ.எஸ்.,’ இயந்திரத்தில் கைரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.