தேர்தலின் போது ஐ.டி., பிரிவு சரியாக செயல்படவில்லை: அதிமுக நிர்வாகிகளிடம் பழனிசாமி ஆவேசம்

12

சென்னை: 'அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு உட்பட சார்பு அணி நிர்வாகிகள், முறையாக தேர்தல் பணிகளை செய்யவில்லை' என, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்ட நிகழ்வு குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பிற மாவட்டங்களை விட, வட மாவட்டங்களில் தான், அ.தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றியது. இதற்கு, பா.ம.க., கூட்டணி முக்கிய காரணம்.

எனினும், சமூக வலைதளங்களில், தி.மு.க., - த.வெ.க., பிரசாரம் செய்த அளவுக்கு, அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு செயல்படவில்லை. அதனால் தான், நம்மால் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட பழனிசாமி பேசியதாவது: புதிய கட்சிகளின் டிஜிட்டல் வேகத்திற்கு இணையாக, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவினர் செயல்படவில்லை. ஏ.ஐ., தொழில்நுட்பங்களை பயன்படுத்தவில்லை.

தேர்தல் பிரசாரத்தின்போது இணையதள பிரசாரம் செய்ய தவறி விட்டது. ஐ.டி., பிரிவு மட்டுமல்ல, எல்லா சார்பு அணிகளும் சரியாக செயல்படவில்லை. இந்த அணிகளுக்கு சரியான ஆட்களை நியமனம் செய்யும்படி தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தேன்.

மாவட்ட நிர்வாகிகள் தான், சார்பு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்தனர். அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், யார் காரணம். நீங்கள் சரியான ஆட்களை நியமித்து இருந்தால், எல்லா அணிகளும் செயல்பட்டிருக்கும். ஐ.டி., அணியில் தான் என் மகன் மிதுன் பணியாற்றினார்.

எனவே, நீங்கள் செய்த தவறை சரி செய்யுங்கள். ஐ.டி., அணிக்கு இனிமேலாவது ஏ.ஐ., உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் தெரிந்தவர்களை நியமியுங்கள். இவ்வாறு அவர் பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், உட்கட்சி பிரச்னையால் சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரை கட்சி பொறுப்பில் இருந்து பழனிசாமி நீக்கிய போது, 'இனி இளைஞர்களின் காலம். நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது' என, முக்கிய பதவிகளில் இளைஞர்களை நியமிக்க வேண்டும் என, ஐ.டி., பிரிவு மாநில செயலர் ராஜ்சத்யன் வலியுறுத்தினார்.

அடுத்த சில நாட்களிலேயே வேலுமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவிகள் கொடுத்தாலும், புகைச்சல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 'தன் மீதான குறையை மறைக்க கட்சியின் ஒட்டுமொத்த அணிகளையும் பழனிசாமி குறைகூறி வருகிறார்' என, ஐ.டி., பிரிவு தரப்பில் பதிலுக்கு குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு பிறகு கட்சியை வழிநடத்த, அண்ணாமலையை கட்சிக்கு கொண்டு வர இப்போதே முயற்சிக்க வேண்டும் என்றும், ஐ.டி., பிரிவு இளைஞர்கள் வலியுறுத்தினர். இதனாலும் கோபமாகியுள்ள பழனிசாமி, ஐ.டி., பிரிவு குறித்து விமர்சித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்றைய கூட்டத்தில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல், பர்கூர் கோவிந்தராசன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால், ஓசூர் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி, பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், ஓசூரில் த.வெ.க.,வை சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் பங்கேற்ற நிகழ்ச்சியில், பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டார்.

@block_B@

மா.செ., பொறுப்பு வழங்க ஆலோசனை



சட்டசபை தேர்தலுக்கு பின், தனக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி செயல்பட்ட, மாவட்ட செயலர்களின் பதவியை பழனிசாமி பறித்திருந்தார். மீண்டும் அந்த பொறுப்பு வழங்கப்படாத விரக்தியில், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர். அதேபோல, மா.செ., பதவி வழங்கும் வரை, வேறு பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர், பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இந்நிலையில், அதிருப்தியில் இருந்தாலும் வேறு கட்சிக்கு செல்லாமல் இருக்கும், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி, அருண்மொழிதேவன், சுகுமார் உள்ளிட்டோருக்கு, மீண்டும் மா.செ., பதவியை வழங்க வேண்டும் என, பழனிசாமியிடம் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களுக்கு பழைய பதவிகளை வழங்குவது பற்றி, பழனிசாமி ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது, புதிதாக மா.செ., பதவியை பெற்றவர்களை அதிர வைத்துள்ளது.block_B

Advertisement