தேசிய கல்வி கொள்கையை புறக்கணிப்பதால் 24 அரசு பல்கலைகளின் தரவரிசை பாதிக்கும்!

17

மதுரை: ''மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை (என்.இ.பி.,) தமிழகம் புறக்கணிப்பதால் இங்குள்ள 24 அரசு பல்கலைகளின் தரவரிசை பாதிக்கும் அபாயம் உள்ளது,'' என, சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான திருவாசகம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு அவர் எழுதிய கடிதம்: தமிழகத்தில் 58 பல்கலைகளில் 24 மாநில அரசுக்கு உட்பட்டது. நாட்டில் உள்ள 1420 பல்கலைகளில் 1396 மத்திய, மாநில, தனியார் பல்கலைகள் என்.இ.பி.,யை ஏற்றுக்கொண்டுள்ளன.

கேரளம், கர்நாடகா, மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்கள் என்.இ.பி.,யை துவக்கத்தில் ஏற்கவில்லை. தற்போது அமல்படுத்தி மத்திய அரசு கல்விக்கான அனைத்து திட்டங்களின் நிதியை பெற்று வருகின்றன. தமிழகத்தில் மத்திய, தனியார், நிகர்நிலை பல்கலைகள் என்.இ.பி.,யை முழுமையாக ஏற்றுக்கொண்டு கல்வி, ஆராய்ச்சிக்கான திட்டங்களுக்கு முழு நிதியை பெறுகின்றன.

24.79 லட்சம் மாணவர், ஆசிரியர் பாதிப்பு



தமிழகத்தில் 24 அரசு பல்கலைகள், அதன் கீழ் உள்ள 2883 கல்லுாரிகள் மட்டுமே என்.இ.பி.,யை ஏற்கவில்லை. இதனால் 24.79 லட்சம் மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். அரசும், அரசியல் தலைவர்களும் என்.இ.பி., தமிழ் மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஏற்புடையதல்ல என்ற காரணங்களை கூறி தடை போட்டுள்ளனர். இதனால் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் எந்த வகையிலும் பாதிப்பு வராது. இங்கு உருவாக்கப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கை எந்த வகையிலும் என்.இ.பி.,க்கு மாற்றாக அமையாது.

தரவரிசைக்கு ஆபத்து



தமிழக பல்கலைகள், உலக அளவிலான தரவரிசையில் 'Q3', 'THE'ல் 15 பல்கலைகள் இடம் பெற்றுள்ளன. என்.ஐ.ஆர்.எப்., ல் நாட்டின் முதல் 100 பல்கலைகளில் 15ம், முதல் 100 கல்லுாரிகளில் 18ம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளன. இதைப்போல் 'நாக்' தரவரிசையில் மிக உயரியதான A++ ஐ 16 பல்கலைகளும், 52 கல்லுாரிகளும் பெற்றுள்ளன. என்.இ.பி., (2020)யை ஏற்கவில்லையென்றால் எந்த நிலையிலும் தற்போது நாம் பெற்றுள்ள இந்த தரவரிசையினை தக்க வைத்துக்கொள்ள முடியாது.

காரணம் என்ன



நாட்டில் அனைத்து பல்கலை, கல்லுாரிகள் தரத்தினை ஆய்வு செய்து, தரவரிசையை நிர்ணயிக்கும் யு.ஜி.சி.,யின் கீழ் 'நாக்' (தேசிய தரமதீப்பீடு மற்றும் அங்கீகார அவை) செயல்பட்டு வருகின்றது. தரவரிசை ஆய்வுக்கு ஒவ்வொரு பல்கலைக்கும், அதன் பாடத் திட்டத்தின் தரம், ஆசிரியர்களின் தகுதி, திறன், உட்கட்டமைப்பு, ஆராய்ச்சிக்கான மேம்பாடு அடிப்படையில் மொத்தமாக 1,000 மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.

தற்போது பல்கலை, கல்லுாரிகளுக்கு தர ஆய்வுக்காக கொடுக்கப்படவுள்ள மதிப்பெண்கள் அளிக்கும் வரைவு முன்வடிவம் (Draft Proforma) வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் கேள்வியே, 'உங்கள் பல்கலை / கல்லுாரி என்.இ.பி.,யை அமல்படுத்துகிறதா' என்பதுதான். இல்லை என்றால் 100 மதிப்பெண்களை இழக்க நேரிடும். ஆமாம், என்றால், அந்தந்த திட்டங்களை செயல்படுத்த தகுந்தவாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.இ.பி.,யை ஏற்காத பல்கலை, கல்லுாரிகள் 1,000 மதிப்பெண்களில் 900க்கு மட்டுமே தரவரிசை மதிப்பெண்களுக்கு தகுதியுள்ளதாக ஆகும் சூழல் உள்ளது. அதிலும் பல இடங்களில் என்.இ.பி.,யை ஏற்காத பாதிப்பால் பல நுாறு மதிப்பெண்களை இழக்க வேண்டிவரும்.

என்ன விளைவு ஏற்படும்



பல்கலை, கல்லுாரிகளின் தர வரிசை குறைந்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவர். மாணவர்கள் வங்கிக் கடன் பெறுவது பாதிக்கும். வெளிநாட்டு பல்கலைகளின் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது உயர்ந்த தரவரிசையில் உள்ள பல்கலைகளில் பட்டம் பெறப்படவில்லை என்றால் மேற்படிப்பிற்கு அனுமதி கிடைக்காது.

ஆசிரியர்களுக்கு உள், வெளிநாட்டிலுள்ள ஆராய்ச்சிக்கு நிதியில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, உள், வெளிநாடுகளில் வேலை பெற முயற்சிப்போருக்கு மிகுந்த சிரமத்தை இச்சூழல் ஏற்படுத்தும். எனவே எந்த அளவிற்கு தமிழக மாணவர், பெற்றோர், ஆசிரியர்களை பாதிக்கும் என்பதை உணர்ந்து முதல்வர் விஜய் மறுஆய்வு செய்வது அவசியம்.

என்ன செய்ய வேண்டும்



பல்கலைகள், என்.இ.பி., 2020ஐ அந்தந்த பல்கலை சிண்டிகேட், ஏ.சி., (அகடமிக் கவுன்சில்), 'செனட்'டில் சமர்ப்பித்து, ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றினால் போதும். என்.இ.பி.,யை அப்படியே அமல்படுத்த தேவையில்லை. தமிழக கல்வி முறைக்கு ஏற்ப மாற்றியும் அமல்படுத்தினாலே போதும். பல்கலைகள் தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. தாய்மொழிக்கு எந்த பாதகமும் ஏற்பட்டுவிடாமல் கொள்கையை செயல்படுத்தினால் தமிழக உயர்கல்வி தரம் உலக அளவில் மேம்படும் என்பது உறுதி. இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement