ஹரியானாவில் போலீசார் - ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச்சண்டை; 4 பேர் சுட்டுக் கொலை

5


குர்கான்: ஹரியானாவில் தொழிலதிபரை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குர்கானின் கோல்ப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக் 2 பகுதியில் வசித்து வரும் தொழிலதிபரிடம் பணம் கேட்டு, வெளிநாட்டிலிருந்து செயல்பட்டு வரும் பிரபல தாதா தீபக் நந்தல் மிரட்டி வந்துள்ளான்.

தொழிலதிபரின் குடும்பத்தினரை மிரட்டுவதற்காக நந்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அவர்கள் தொழிலதிபரின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில், நந்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் படுகாயமடைந்தான். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், "நாங்கள் அவர்களைச் சரணடையுமாறு கூறினோம். ஆனால் அவர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். தற்காப்புக்காகவும், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடுவதை தடுப்பதற்காகவும் பதில் தாக்குதல் நடத்தினோம். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்," என்றனர்.

Advertisement