ஸ்மிருதி, ஹர்மன்பிரீத் அரைசதம்: இந்திய அணி அபாரம்

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் கடந்தனர்.
இங்கிலாந்து சென்றுள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இது, லார்ட்சில் நடக்கும் முதல் பெண்கள் டெஸ்ட் என்ற வரலாறு படைத்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் நாட் சிவர்-புருன்ட் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


ஸ்மிருதி அபாரம்: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி துவக்கம் தந்தது. லாரன் பைலர் 'வேகத்தில்' ஷைபாலி (0) வெளியேறினார். லாரன் பெல் வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய யஸ்திகா பாட்யா (12) நிலைக்கவில்லை. லாரன் பைலர் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்மிருதி. மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், சோபி எக்லெஸ்டோன் வீசிய 10வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். எக்லெஸ்டோன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மிருதி, 50 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது இஸ்ஸி வோங் பந்தில் ஜெமிமா (35) போல்டானார்.

ஹர்மன்பிரீத் நம்பிக்கை: பின் இணைந்த ஸ்மிருதி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி நம்பிக்கை தந்தது. இஸ்ஸி வோங், மேடி வில்லியர்ஸ் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ஹர்மன்பிரீத் கவுர், 99 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது இஸ்ஸி வோங் பந்தில் ஸ்மிருதி (83 ரன், 1X6, 11X4) அவுட்டானார். ஹர்மன்பிரீத் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் (13) சோபிக்கவில்லை.

தீப்தி சர்மா (57), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஸ்ரீ சரணி (3) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

300வது போட்டி

லார்ட்ஸ் டெஸ்ட், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பங்கேற்ற 300வது சர்வதேச போட்டியானது. இதுவரை 9 டெஸ்ட் (718 ரன்), 120 ஒருநாள் (5411 ரன்), 171 சர்வதேச 'டி-20' (4538) போட்டிகளில் விளையாடி உள்ளார். இம்மைல்கல்லை எட்டிய 3வது இந்திய வீராங்கனை, 12வது சர்வதேச வீராங்கனையானார் ஸ்மிருதி. ஏற்கனவே ஹர்மன்பிரீத் கவுர் (374 போட்டி, 8 டெஸ்ட், 164 ஒருநாள், 202 சர்வதேச 'டி-20'), மிதாலி ராஜ் (333 போட்டி, 12 டெஸ்ட், 232 ஒருநாள், 89 சர்வதேச 'டி-20') இந்த இலக்கை அடைந்திருந்தனர்.

* 300 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இளம் வீராங்கனையானார் ஸ்மிருதி மந்தனா (29 ஆண்டு, 357 நாள்). இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் சுனே லுாஸ் (30 ஆண்டு, 163 நாள்) இச்சாதனை படைத்திருந்தார்.

Advertisement