ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்: தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா

2

டெஹ்ரான்: உலகின் மிக முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தன் அடுத்த கட்ட தாக்குதல்களை தொடங்கியுள்ளதால், பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. ஆனால், இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதையடுத்து, ஈரானுடன் அமைதி பேச்சு நடத்துவதில் எவ்வித பயனுமில்லை எனக்கூறி, போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்; ஆனாலும், அமைதி பேச்சை தொடர்வதாக தெரிவித்தார்.

ஏவுகணை தாக்குதல்

இருப்பினும், இரு தரப்பும் கடந்த மூன்று நாட்களா க தொடர்ந்து பரஸ்பரம் தாக்கி வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஈரான் மற்றும் ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது.

இப்பேச்சில், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து எதிர்காலம் குறித்து இரு தரப்பும் விவாதித்ததாகவும், இது குறித்து மேலும் பேச்சை தொடர இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ஓமன் தெரிவித்தது.

ஓமன் நாட்டு பிரதிநிதியுடனான சந்திப்பில், 'கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான பொருத்தமான வழிகள்' குறித்து விவாதித்ததாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

இப்பேச்சை தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை நேற்று அறிவித்துள்ளது.

ஜலசந்தி மூடுவது குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

பதற்றம்

ஈரானை நோக்கி 1,000 ஏவுகணைகள் குறிவைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அதில், தன் தந்தை கமேனி கொல்லப்பட்டதற்கு ஈரான் பழி வாங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த பழி வாங்குதல் தங்கள் தேசத்தின் விருப்பம் என்றும், நிச்சயமாக அது நிறைவேற்றப்படும் என்றும் சபதமிட்டுள்ளார். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

@block_B@ 140 இடங்களில் தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து, அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ஈரானில் உள்ள 140 ராணுவ இலக்குகள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், ஆயுதக்கிடங்குகள், கடற்படை தளங்கள் தகவல் தொடர்பு மற்றும் கடலோர கண்காணிப்பு மையங்கள் ஆகியவற்றை குறிவைத்து அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும், 300க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய ராணுவ தளங்களை குறிவைத்து, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா கடந்த இரு நாட்களில் நடத்திய தாக்குதல்களில், 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 115 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.block_B

Advertisement