'இ - 20' பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை!: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்

14

புதுடில்லி: 'இ - 20 பெட்ரோல், வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை, 35 சதவீதம் வரை குறைத்தாலும், சிறந்த பிக்கப், சீரான வேகம் அதிகரிப்பு, துாய்மையான இன்ஜின் செயல்பாடு உள்ளிட்ட பல நன்மைகளை தரும். இது வாகனங்களில் எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாது' என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பதையும் நோக்கமாக கொண்டு, கடந்த ஏப்., 1 முதல் நாடு முழுதும், 'இ - 20' பெட்ரோல், அதாவது 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

எத்தனால் கலப்பு அதிகரிப்பதால், பழைய வாகனங்களின் இன்ஜின்கள் பாதிக்கப்படலாம் என்றும் வாகனங்களின், 'மைலேஜ்' எனப்படும், எரிபொருள் சிக்கனம் குறையலாம் என்றும், 'இ - 20' பெட்ரோல் மீது விமர்சனங்கள் எழுந்தன.

சிக்கனம்



இது குறித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

'இ - 10' பெட்ரோலைவிட, 'இ - 20' துாய்மையான, உயர்தரம் மற்றும் அதிக திறன் உடைய எரிபொருள். பல ஆண்டுகால அறிவியல் சோதனைகள், வாகன உற்பத்தியாளர்கள் உடனான ஆலோசனைகள் மற்றும் உள்நாட்டு எத்தனால் உற்பத்தியின் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு பின்னரே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுதும் அறிமுகம் செய்வதற்கு முன், இன்ஜின் ஆயுள், எரிபொருள் அமைப்புகளின் இணக்கத்தன்மை, அரிப்பை தடுக்கும் திறன், வாகனத்தை ஓட்டும் வசதி ஆகிய அம்சங்களில், 'இ - 20' பெட்ரோல் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 'இ - 20' பெட்ரோல், சில வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை 35 சதவீதம் வரை குறைக்கக்கூடும்.

சரிபார்ப்பு



அதேசமயம், அதிக ஆக்டேன் அளவு, இன்ஜின்களில் ஏற்படும் தேவையற்ற சத்தம் மற்றும் அதிர்வுகளை குறைக்கும். சிறந்த பிக்கப், சீரான வேகம் அதிகரிப்பு, துாய்மையான இன்ஜின் செயல்பாடு மற்றும் குறைவான கார்பன் உமிழ்வு போன்ற மிக முக்கிய நன்மைகளை இது வழங்கும்.

இந்த பெட்ரோலை பயன்படுத்துவதால், வாகனத்தின் பாகங்களின் ஆயுட்காலம் குறைதல், அசாதாரண தேய்மானம் போன்ற எந்த பாதிப்புகளும் இல்லை என பிரபல வாகன உற்பத்தியாளர்களே சான்றளித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் நோக்கமே, பெட்ரோல் நிலையங்களில், 'இ - 20' பெட்ரோலின் விலையை குறைப்பதைவிட, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பதை குறைப்பதும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே ஆகும்.

'இ - 20' எரிபொருள் நாடு தழுவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன், வாகன உற்பத்தியாளர்கள், சோதனை முகமைகள், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் சரிபார்க்கப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள், 'இ - 20' தொடர்பான தவறான தகவல்களால் குழப்ப மடைய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement