ஆடி மாத பிறப்பையொட்டி மங்கல கயிறு உற்பத்தி தீவிரம்
உடுமலை: ஆடி மாத பிறப்பையொட்டி மங்கல கயிறுகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இவ்வகை கயிறுகளை அனுப்பும் பணியை, வரதராஜபுரம் கிராம மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே வரதராஜபுரத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மங்கல கயிறுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு நாளில், தாலிக்கயிறு மாற்றும் வழக்கம் உள்ளது.
மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில், மங்கல கயிறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இத்தகைய மங்கல மற்றும் தாலிக்கயிறுகள், வரதராஜபுரத்தில் தயாரிக்கப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விசைத்தறிக்கான நுால் தயாரிக்கும் சைசிங் மில்களில் இருந்து, வீணாகும் நுாலை மூலப்பொருளாகக்கொண்டு மங்கல கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வகை நுாலை ராட்டைகளில் சுற்றி, சீராக்குகின்றனர்.
பின்னர் அவற்றுக்கு சாயமேற்றி, பண்டல்களாக கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்தாண்டு மூலப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், குறித்த நேரத்தில் கயிறுகளை உற்பத்தி செய்வது சிக்கலாகியுள்ளது.
இருப்பினும், ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், ஆடி மாத சீசனுக்கு தேவையான மங்கல கயிறுகள் உற்பத்தியை அக்கிராம மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.