ஏரிகளில் நடைபெறும் மெகா மண் திருட்டு :விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கவனிப்பாரா?

விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுப்பாடின்றி ஏரிகளில் மண் எடுத்து வருவதால் ஏரிகளின் தன்மை மாறி அழியும் நிலை உருவாகி வருகிறது.

தமிழகத்தில் ஏரிகள் மூலம் மூன்று போகம் சாகுபடி நடந்து வந்தது. அப்போது விவசாயிகள் தாங்களே முன்னின்று ஏரிகளை பாராமறித்து பாதுகாத்தனர்.

ஏரிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதால், ஏரி பாசனம் தேவையற்று போனது. இதனால் விவசாயிகள் ஏரிகளை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டனர்.

தண்ணிர் தேவைக்காக ஏற்படுத்திய ஏரிகள் இப்போது மண் தேவைக்காக மாறிவிட்டது. மண் எடுப்பதன் மூலம் கரைகளை பலவீனப்படுத்தி, நீர் வரத்து பாதைகளை துண்டித்து மெல்ல மெல்ல ஏரிகளை அழித்து வருகின்றனர்.

சமீபகாலமாக ஏரிகளில் மண் எடுக்கும் வேகம் அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்கவும், மண் பாண்டம் செய்பவர்கள் பிழைப்பு நடத்தவும் அரசு வழங்கிய அனுமதி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அத்து மீறல்களாக மாறிப்போனது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் ஏரியில் இருந்து சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண் கடத்திச் சென்றனர். செஞ்சி பகுதியில் சிங்கவரம், பொன்பத்தி, நரசிங்கராயன்பேட்டை, மேலச்சேரி உட்பட ஏராளமான ஏரிகளில் கட்டுப்பாடின்றி மண் எடுத்து வருகின்றனர்.

விவசாயத்திற்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாதவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு டிப்பர் லாரி உரிமையாளர்களிடம் கனிசமான தொகையை பெற்றுக் கொண்டு, கவனிக்க வேண்டியவர்களை கவனித்து செஞ்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்கு இரவு பகலாக ஏரி மண்ணை கடத்திச் செல்கின்றனர்.

அரசு வழங்கியுள்ள அளவை விட பல மடங்கு ஆழத்திற்கு மண்ணை எடுத்து ஏரிகளை சிதைந்து வருகின்றனர். இதனால் ஏரிகள் அதன் தன்மையை இழந்து வேகமாக அழிந்து வருகின்றன.

இதே நிலை நீடித்தால் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் போனால் இவலச மின்சாரம் வழங்கினாலும் அதை பயன்படுத்த கிணறுகளில் தண்ணீர் இருக்காது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகளில் மண் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் டிப்பர் லாரிகள் மூலம் ஏரிகளில் மண் எடுக்க தடை விதித்துள்ளது. டிராக்டர்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி கொடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கடப்பாடின்றி இரவு பகலாக நடந்து வரும் ஏரி மண் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement