சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை

வால்பாறை: கருமலை பஜாரில், அரசு ஆரம்ப  துணை சுகாதார நிலையம்  அமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ளது கருமலை பஜார். இந்த எஸ்டேட்டை சுற்றிலும் அக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை, பச்சமலை உள்ளிட்ட எஸ்டேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்தப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையல் இல்லாததால், 8 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தொழிலாளர்கள் கூறியதாவது:

கருமலை  எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், துணை சுகாதார நிலையம்  அமைக்க வேண்டும் என, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இங்கு வசிக்கும் மக்கள் காய்ச்சல், தலைவலி என்றால் கூட, வால்பாறை நகருக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.  சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் இந்தப்பகுதியில் விபத்து ஏற்பட்டால் கூட, முதலுதவி அளிக்க முடியாத  நிலை உள்ளது. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி கருமலை பஜாரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement