மஹாராஷ்டிராவில் மகளிர் உரிமை திட்டத்தில் 92 லட்சம் பெண்கள் நீக்கம்

மும்பை: மஹாராஷ்டிராவில் மகளிர் உரிமை தொகைக்கான பயனார்களின் விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாதது, வருமான வரம்பு மற்றும் வயது வரம்பை மீறியது உள்ளிட்ட காரணங்களினால் 92 லட்சம் பெண்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


மஹாராஷ்டிராவில் அரசு ஊழியர் அல்லாத பெண்களுக்கு, மாதந்தோறும் 1,500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுதும் 2.25 கோடி பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இதற்காக, மாதந்தோறும் 3,700 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.


இந்த திட்டத்தின் கீழ் தகுதியானர்களுக்கு தான் உரிமைத் தொகை வழங்கப்படுகிறதா என்பதை கண்டறிய, கே.ஒய்.சி., எனப்படும் பயனாளர்கள் விபரங்களை உறுதி செய்து சரிபார்க்கும் பணியை மாநில அரசு மேற்கொண்டது. இதற்காக விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டன.


இதனையடுத்து 92 லட்சம் பெண்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கேஓய்சி விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 50 முதல் 55 லட்சம் பெண்கள் கேஓய்சி படிவத்தை சரியாக நிரப்பாத காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளனர்.இந்த திட்டத்திற்கான வருமான உச்ச வரம்பை மீறியதால் 12 லட்சம் பேரும் அதிகபட்ச வயது 65 ஐ தாண்டியதால் 4.5 லட்சம் பெண்களும் இந்தத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 14 ஆயிரம் ஆண்கள், இந்த திட்டத்தில் பயனடைந்தது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டு உள்ளனர். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 28 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Advertisement